2022 கடகம் ராசி பலன்கள் - 2022 Kadagam Rasi Palangal |
கடக ராசி அன்பர்களே
இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள், நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது. உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள். குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாட பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வர தடை இருக்காது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் ஏற்படலாம். அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்
குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை கடக ராசிக்காரர்களுக்கு அமைதியான சூழல் இருக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். நான்காம் இடத்தில் குரு, சனி சேர்க்கை இருப்பதால் சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரிகள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு அனுகூலமான எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு அக்கறை செலுத்தினால் மட்டுமே அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
பொருளாதாரம்:
பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்தாலும் செலவுக்கு ஏற்ப வரவு வந்து சேரும். வீண் விரயங்களை சுப விரயமாக மாற்றும் சாதுர்யம் கொண்டு செயல்படுவது நல்லது. பெரிய தொகை கைக்கு வரும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பதினோராம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்க இருப்பதால் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தகுந்த நிபுணர்களின் அறிவுரையுடன் மிகப் பெரிய முதலீடுகளை கையாள்வது நல்லது.
தொழில்:
தொழில் ரீதியான முன்னேற்றம் உங்கள் ராசியைப் பொறுத்தவரை சிறப்பாக அமைகிறது. பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு தம்முடைய துறை சார்ந்த அறிவாற்றலை மேம்படுத்துவது நல்லது. கடின உழைப்பால் உயரக் கூடிய அற்புதமான ஆண்டாக இவ்வாண்டு கடக ராசிக்காரர்களுக்கு அமைய இருக்கிறது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வளர்ச்சியை எட்ட கூடிய நல்ல பலன்கள் உண்டு. எதிரிகளின் சூழ்ச்சி அவ்வபோது உங்களை சோர்வடைய செய்தாலும், உங்களுடைய அனுபவ அறிவால் புத்திசாலித்தனமாக அவர்களை வென்று காட்டுவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய ஆண்டாக அமைய இருக்கிறது. விளையாட்டுத் தனத்தை விட்டுவிட்டு அர்ப்பணிப்புடன் எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது பாராட்டுகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கடக ராசிக்காரர்களுக்கு ஆண்டின் துவக்கத்தில் குரு தாக்கம் காரணமாக சில பிரச்சனைகள் ஏற்பட இருந்தாலும் படிப்படியாக அவை குறைய ஆரம்பிக்கும். எலும்பு தொடர்பான நோய்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. ஆண்டின் இரண்டாம் பாதி ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும் எனவே கவலை கொள்ள தேவை இல்லை.
காதல்:
கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து வலுவான உறவை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்களுக்குள் இருந்து வந்த ஈகோ மறையும். புதிதாக திருமணம் ஆகப் போகும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் இடையூறு ஏற்படாமல் இருக்க வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு விளக்கேற்றி வருவது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் மனதிற்கு பிடித்தவர்களை மணமுடிக்கும் யோகமுண்டு.
பரிகாரம்:
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை ஏற்ற இறக்கமான பலன்கள் 2022ஆம் ஆண்டு முழுவதும் அமைய இருக்கிறது. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றி காண முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட்டு வருவது உத்தமம். முக்கிய பயணங்களின் பொழுது சிதறு தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து விட்டு பின்னர் கிளம்புவது நல்லது. இடர்கள் நீங்கி தன வரவு சிறப்பாக அமைய கஷ்டப்படுபவர்களுக்கு தானியங்களை தானம் வழங்குங்கள்.